Modhi Vilaiyadu Thirai Vimarsanam..

Sunday, August 2, 2009


அம்பானி மாதி‌ரி பெரும் பணக்காரர் கலாபவன் மணி. அவரது ஒரே மகன் வினய். வளர்ப்பு மகன் யுவா. கலாபவன் மணியால் பாதிக்கப்பட்ட மகாதேவன் வினய்யை கொலை செய்ய பாங்காங்கிலிருந்து கில்லர் ஒருவனை வரவைக்கிறார். கில்ல‌ரின் துப்பாக்கிக்கு வினய்க்குப் பதில் யுவா பலியாகிறான்.
அன்றிலிருந்து வினய்யின் ஆடம்பர வாழ்க்கை பறிக்கப்படுகிறது. அவரை கொலை செய்ய எதி‌ரிகள் துரத்துகிறார்கள். அடைக்கலம் தேடி அப்பா கலாபவன் மணியிடம் சென்றால், “நீ சாக வேண்டியவன்தான்” என்று புதுக்குண்டை போடுகிறார். அவர் அப்படி சொல்ல என்ன காரணம்? வினய் இழந்த தனது ஆடம்பர வாழ்க்கையை மீட்டெடுத்தாரா?

ஆறு வ‌ரியில் சுவாரஸியமாக தெ‌ரியும் கதை பதினாலு ‌‌ரீலில் படுத்தியெடுக்கிறது. கலாபவன் மணியின் உண்மையான மகன் யுவா. தொழில் எதி‌ரிகளிடமிருந்து மகனை காப்பாற்ற அவனுக்கு பினாமி போல் வினய்யை வளர்க்கிறார். இந்த உண்மையை கலாபவன் மணி வெளியே சொன்னால்தான் அவரது எதி‌ரிகளிடமிருந்து வினய் தப்பிக்க முடியும். மகன் இறந்த ஆத்திரத்தில் அதை செய்ய மறுக்கிறார் கலாபவன் மணி.

இந்த நேரத்தில் ஹீரோ என்ன செய்வார்? கோபத்தில் பொங்கியெழ வேண்டும். கலோனியல் கஸின்சும், தேவாவும் மோதி விளையாடு என்று ஹைபிட்‌ச்சில் பாட்டுப் பாட வினய்யும் பொங்கியெழுகிறார். அதற்கு அடுத்துவரும் காட்சிகள்தான் காமெடி.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் கலாபவன் மணியை அவரது செக்யூ‌ரிட்டி அலுவலகத்தில் நுழைய மறுப்பதோடு கன்னத்தில் அறைகிறான். பர்சனல் செக்ரட்ட‌‌ரி முதல் லோக்கல் போலீஸ் வரை யாருக்கும் அவரை அடையாளம் தெ‌ரியவில்லை.

ரோட்டோரத்தில் பிச்சைக்காரர்களுடன் சாப்பிட்டு, தெருவோரம் உறங்கி, லாக்கப்பில் அடைபட்டு... அட, என்னதான் நடக்கிறது என்று கலாபவன்மணி மாதி‌ரியே நாமும் குழம்பினால், எல்லாம் வினய்யின் திருவிளையாடல் என்கிறார் இயக்குனர். வினய் சொன்னதற்காக கலாபவன்மணியின் ஆட்கள் அவரையே அடையாளம் தெ‌ரியாத மாதி‌ரி நடித்தார்களாம். காதுல பூ கேள்விப்பட்டிருக்கோம். சரண் பாத்தி கட்டி தோட்டமே வைக்கிறார்.
காஜல் அகர்வாலின் காதல் எபிசோட் இன்னொரு காமெடி. வினய்யின் விலையுயர்ந்த காருக்கு 3 லட்சம் செலவு வைக்கிறார் காஜல். அதை ஈடு செய்ய வினய்யின் வீட்டில் வேலை செய்கிறார். காமெடி என்னவென்றால் காஜலும் ஒரு மில்லியன‌ரின் மகள்.

வினய்க்கு பணக்கார வேஷம் கச்சிதமாக பொருந்துகிறது. அவரது அரைகுறை தமிழ் சில நேரம் தேன், பல நேரம் தேள். யுவா நம்பிக்கை தரும் அறிமுகம். ஹனிஃபாவின் டயலாக் டெலிவ‌ரியும், மயில்சாமியின் லிக்கர் காமெடியும் படத்தின் ‌ரிலீஃப். சந்தானத்திடம் சத்தம் அதிகம்.

கலோனியல் கஸின்சின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். பாடல்கள் படத்தின் மிகப்பெ‌ரிய பலம். அதற்கு திருஷ்டி ப‌ரிகாரமாக பின்னணி இசை. பல இடங்களில் இசைக்கருவிகளை மீறி டயலாக்கை பு‌ரிந்து கொள்ள தனித் திறமை வேண்டும்.

கலை இயக்குனர் ‌ரிச்சான பொருட்களால் ஃபிரேமை நிறைத்திருக்கிறார். அதனால் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலையில்லை. படத்தின் இரு பெரும் பகுதிகள் காஜல் அகர்வால் - வினய் காதல் மற்றும் கலாபவன்மணி - வினய் மோதல். இரண்டுமே நம்ப முடியாத நாடகமாகிவிட்டதால் மோதி விளையாடு பாதி கிணறே தாண்டுகிறது.

ஊசிப் போன வடையை ஏசி அறையில் ப‌ரிமாறினால் எப்படியிருக்கும்? மோதி விளையாடு அந்த வகை.

0 comments:

Post a Comment

 
 
 
 
Twitter Bird Gadget